top of page

மாதம் ரூ.15 லட்சம் வருமானம்... அம்மிக்கல்லை பிராண்டாக மாற்றிய சௌந்தர்யலட்சுமி!

  • Writer: yagasathriya24mana
    yagasathriya24mana
  • Jul 31
  • 3 min read

‘‘அமெரிக்கால வாழுற இந்தியர்கள்கிட்ட நம்ம ஊர் அம்மி, இஞ்சி-பூண்டு தட்டுற உரல், ஆட்டுக்கல்லு மாதிரியான பாரம்பர்ய சமையல் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்குறதைத் தெரிஞ்சுக்கிட்டேன்...'' -


ஒருகாலத்தில் மிக்ஸி வந்ததால் மறைந்து விடும் என்று நினைக்கப்பட்ட அம்மிக்கல், ஆட்டுக்கல், உலக்கை... இன்று மீண்டும் சமையலறை களில் இடம்பிடித்திருக்கின்றன. இது வெறும் பழைய சமையல் கருவிகளின் மறுவரவு அல்ல. பாரம்பர்யத்தையே புதிய தலைமுறைக்கான பிராண்டாக மாற்றிய ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தைச் சேர்ந்த செளந்தர்ய லட்சுமியின் வெற்றிக்கதை.


கல்லூரியில் படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பைப் பெற்றவர் செளந்தர்யலட்சுமி. அதை தவிர்த்துவிட்டு, 20,000 ரூபாய் முதலீட்டில் பிசினஸை தொடங்கி, வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி மூலம் இன்று மாதம் 12 லட்சம் வரை டேர்ன்ஓவர் செய்துவருகிறார். தன் வெற்றிப் பயணத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.


கிரானைட் தொழிலிலிருந்து..!


“எங்க அப்பா பல வருஷமா கிரானைட் பிசினஸ் பண்ணிட்டு இருந்தார். சின்ன வயசுல இருந்தே அந்தத் தொழிலைப் பார்த்து வளர்ந்ததால, ஒருநாள் அதை நானும் எடுத்து நடத்தணும்னு ஆசைப் பட்டேன். படிப்பு முடிஞ்சதும் அப்பாவோட பிசினஸ்ல என்னையும் இணைச்சுக்கிட்டேன். ஆனா, எதிர்பாராத விதமா கொரோனா வந்து எங்களோட தொழில் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுருச்சு. ஈரோட்டுல எங்களுக்கு ஐந்து ஷோரூம்கள் இருந்துச்சு. கொரோனா காலத்துல விற்பனை சரிஞ்சதால, நஷ்டம் அதிகமாகி நாலு ஷோரூம்களை மூடுற நிலைமைக்கு வந்துட்டோம். அந்த இடைப்பட்ட காலத்துல எனக்குக் கல்யாணம் ஆகி அமெரிக்கா போயிட்டேன். அங்க நான் பார்த்த சில விஷயங்கள்தான், இன்று நான் நடத்துற தொழிலோட அடித்தளமா மாறுச்சு’’ என்றவர், அதுபற்றி விவரித்தார்.


அமெரிக்காவில் பிறந்த ஐடியா!

‘‘அமெரிக்கால வாழுற இந்தியர்கள்கிட்ட நம்ம ஊர் அம்மி, இஞ்சி-பூண்டு தட்டுற உரல், ஆட்டுக்கல்லு மாதிரியான பாரம்பர்ய சமையல் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்குறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா, அதையெல்லாம் இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி கிரானைட், மார்பிள்ஸ்ல அழகான வடிவமைப்புல செஞ்சு பயன்படுத்திட்டு இருந்தாங்க. அதைப் பார்த்தப்போ, ‘இத்தனை வருஷமா அப்பா கிரானைட் பிசினஸ்ல இருக்காரு... இந்த ஐடியா நமக்கு ஏன் தோணல?’னு நினைச்சேன். இந்தியா வந்ததும் அப்பாகிட்ட என் ஐடியாவைச் சொன்னேன். ‘நாம லாரி கணக்குல கிரானைட் விக்கிறவங்க. ஒரு கல்லு, ரெண்டு கல்லுனு வித்தா அதுல பெரிய லாபம் இருக்காது’னு அப்பா முதல்ல தயங்குனாரு” என்றவர், தான் களத்தில் இறங்கிய கதையைப் பகிர்ந்தார்.


20,000 ரூபாயில் தொடங்கிய கனவு!


“எனக்கு அந்த ஐடியாவை விட்டுட மனசே வரல. என்கிட்ட சேமிப்பா 20,000 ரூபாய் இருந்துச்சு. ‘இதையே முதலீடா வெச்சு ஆரம்பிச்சுப் பார்ப்போமே’னு முடிவு பண்ணேன். பொதுவா தரை, கட்டட வேலைகளுக்குப் பெரிய சைஸ் கற்கள்தான் தேவைப்படும். ஆனா, நான் செய்ய நினைச்சது சின்னச் சின்ன சமையல் பொருள்கள். அதனால குவாரிகள்ல உடைஞ்சு ஒதுக்கி வெச்சிருந்த கற்களே எனக்குப் போதுமானதா இருந்துச்சு.

அந்தக் கற்களை வாங்கிட்டு, எங்க ஊர்ல அம்மி கொத்துறவங்க, ஆட்டுக்கல் செய்றவங்களைத் தேடிக் கண்டு பிடிச்சேன். அவங்ககிட்ட பத்து பீஸ்களை மட்டும் செஞ்சு வாங்குனேன். அதே நேரத்துல என் தோழி ஒருத்தவங்க ஒரு கண்காட்சியில ஸ்டால் போட்டிருந்தாங்க. ‘என்னோட பொருள்களையும் அங்க வெச்சுப் பார்ப்போமே’னு எடுத்துட்டுப் போனேன். நம்ப முடியாத மாதிரி, ரெண்டு நாள்ல பத்து பீஸ்களும் விற்று தீர்ந்துச்சு. ஸ்டால் முடியுறதுக்குள்ளேயே அடுத்தடுத்த ஆர்டர்களும் வர ஆரம்பிச்சிடுச்சு.

ஸ்டால்ல கிடைச்ச பணத்தையே திரும்ப முதலீடா போட்டு, மறுபடியும் கற்கள் வாங்கிப் பொருள்கள் செஞ்சு விற்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல கோபிசெட்டிபாளையம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்ல இருந்துதான் ஆர்டர்கள் வந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா பிசினஸும் வளர ஆரம்பிச்சுது. ஆனா, ஒரு கட்டத்துக்கு மேல விற்பனை அதிகரிக்கல. புது வாடிக்கையாளர்களை அடையணும்னா, விளம்பரம் பண்ணியே ஆகணும்னு புரிஞ்சுது. பெரிய அளவுல விளம்பரம் பண்ண என்கிட்ட வாய்ப்பு இல்ல. அதனால, இன்ஸ்டாகிராம்லேயே ஒரு பிசினஸ் பக்கத்தை ஆரம்பிச்சு, வீடியோக்கள் எடுத்து பதிவிட ஆரம்பிச்சேன். அது என்னோட பொருளை இன்னும் அதிகமான வாடிக்கையாளர்கள்கிட்ட கொண்டு போய்ச் சேர்த்துச்சு” என்றவர் சந்தித்த சவால்கள் பற்றிப் பேச ஆரம்பித்தார்.


ஒரே ஆர்டர்... உடைந்த கனவுகள்!


“ஆரம்பத்துல ‘இந்தப் பொண்ணு ஏதோ ஆட்டுக்கல், அம்மிக்கல் பண்ணுதுனு’ எல்லாரும் சாதாரணமாகாத் தான் பார்த்தாங்க. ஆனா, கொஞ்ச நாள்லேயே போட்டி அதிகமா கிடுச்சு. நான் விலையைக் கொஞ்சம் குறைச்சு, மார்ஜினைக் கம்மியா வெச்சு விற்றதால வாடிக்கையாளர்கள் அதிகமாக ஆரம்பிச்சாங்க. அதே நேரத்துல சிலருக்கு அது பிடிக்கல. எனக்குக் கிரானைட் கிடைக்கிறதைத் தடுக்கக்கூட முயற்சி பண்ணாங்க. அதையெல்லாம் சமாளிச்சுட்டு தொழிலைத் தொடர்ந்து நடத்தினேன்.

அதுக்கப்புறம் என் வாழ்க்கை யில மறக்க முடியாத ஒரு நாள் வந்துச்சு. ஒரு லட்சம் ரூபாய்க்கு பெரிய ஆர்டர் கிடைச்சது. ‘இதுதான் என் பிசினஸோட டர்னிங் பாயின்ட்’னு ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஒரு வாரத்துக்குள்ள பொருள்களைத் தயாரிச்சு அனுப்பணும். அந்த நேரத்துலதான் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்துச்சு. அதுவரைக்கும் எனக்குப் பொருள் செஞ்சு கொடுத்த சிலர், ‘இனிமே எங்களால செய்ய முடியாது’னு கை விரிச்சுட்டாங்க. என்ன பண்றதுனே தெரியல.கிடைச்ச ஆர்டர் கையை விட்டுப் போகப்போகுதுனு நினைச்சேன்.


மறுநாள் கடைக்குப் போனப்போ, ‘கவலைப்படா தீங்கம்மா... முடிச்சிடலாம்’னு சொல்லி, எங்க நிறுவனத்துல வேலை செய்யுற அண்ணா நாலு பேரோட நின்னுட்டு இருந்தாரு. அந்தக் காட்சியை இன்னைக்கும் மறக்க முடியாது. அவங்க உதவியால இரவு பகலா வேலை பார்த்து, எப்படியோ ஆர்டரை முடிச்சு பார்சல் பண்ணி லாரியில அனுப்பி வெச்சோம். ஆனா, மறுநாளே வாடிக்கை யாளர்கிட்ட இருந்து போன் வந்துச்சு. ‘நீங்க அனுப்புன பொருளெல்லாம் உடைஞ்சு வந்திருக்கு’னு சொன்னாங்க. வீடியோவும் அனுப்பியிருந் தாங்க. அந்த வீடியோவைப் பார்த்தப்போதான் தப்பு எங்க நடந்துச்சுனு புரிஞ்சுது. அதுக்கு முன்னாடி சின்னச் சின்ன ஆர்டர்கள்தான் வந்துட்டு இருந்துச்சு. அதனால வைக்கோல் வெச்சு பார்சல் பண்ணி, தெரிஞ்சவங்க மூலமா அனுப்புன தால எந்தப் பிரச்னையும் வரல. ஆனா, இவ்வளவு தூரம் லாரியில பயணம் பண்ணும்போது, பொருள்கள் ஒண்ணோட ஒண்ணு மோதி முழுவதும் சேதமாயிடுச்சு. அவ்வளவுதான், நானும் உடைஞ்சு போயிட்டேன். என் கனவுகளும்.


5,000 ரூபாயில் தொடங்கிய இரண்டாவது இன்னிங்ஸ்!


பொருளை வாங்கிய வாடிக்கையாளர் சமூக வலை தளங்களில் எனக்கு எதிரா வீடியோ போட ஆரம்பிச்சாரு. வாடிக்கையாளர் கொடுத்த அட்வான்ஸைத் திருப்பிக் கொடுக்கணும். வேலை பார்த்த வங்களுக்குக் கூலி கொடுக்கணும். மறுபடியும் கற்கள் வாங்கிப் பொருள் செய்யணும். ஒரே நேரத்துல ஏகப்பட்ட அழுத்தம். வீட்டுலயும், ‘போதும்... இனிமே இந்த பிசினஸ் வேண்டாம்’னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு கட்டத்துல நானுமே அப்படித் தான் நினைச்சேன். ‘கஷ்டப்பட்டும் தோத்துட் டோமே’னு மனசுக்குள்ள ஓடிக் கிட்டே இருந்துச்சு. அப்போதான் ஒரு விஷயம் புரிஞ்சுது. வெளியில இருந்து பார்க்கும்போது பிசினஸ் ரொம்ப ஈஸியா தெரியும். ஆனா, அதுக்குப் பின்னாடி எவ்வளவு போராட்டம் இருக்குனு அந்த ஒரு சம்பவமே எனக்குக் கத்துக்கொடுத்துருச்சு.


அந்த நேரத்துல எனக்கு ரெண்டு வழிதான் இருந்துச்சு. ஒண்ணு, ‘இவ்வளவுதான்’னு பிசினஸை அப்படியே நிறுத்திடணும். இல்ல, மறுபடியும் பூஜ்ஜியத்துல இருந்து ஆரம்பிக்கணும். நான் ரெண்டாவது வழியைத்தான் தேர்ந்தெடுத்தேன். கொஞ்சம் கடன் வாங்கி நஷ்டத்தைச் சமாளிச்சேன். வீட்டோட எதிர்ப்பையும் மீறி, கையில இருந்த 5,000 ரூபாயை முதலீடு பண்ணி, மறுபடியும் பிசினஸை ஆரம்பிச்சேன். ‘Stone and Soul’ பிராண்டை கட்டமைச்சேன்.


முதல்ல பாதுகாப்பா பார்சல் பண்ற முறையைக் கத்துக்கிட்டேன். அடுத்தது மார்க்கெட்டிங்ல முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பிச்சேன். இன்ஸ்டாகிராம் பக்கத்துல தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டேன். இன்ஃப்ளூயன்சர்களோட கொலாபரேஷன் பண்ண ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் ஆர்டர்கள் மீண்டும் வர ஆரம்பிச்சுச்சு. கடன்ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்தேன். கிடைச்ச லாபத்தை திரும்பவும் தொழில்லயே முதலீடு பண்ணேன்.


கிரானைட், மார்பிளில் அம்மி, ஆட்டுக்கல், பூஜை பொருள்கள் எனப் புதுப்புது பொருள்களை அறிமுகப் படுத்தினேன். இப்போ எங்ககிட்ட 200-க்கும் மேற்பட்ட பொருள்கள் இருக்கு. 15 பேர் வேலைக்கு இருக்காங்க. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பொருள்களை அனுப்பிட்டு இருக்கோம். மாதம் 12 லட்ச ரூபாய் முதல் 15 லட்ச ரூபாய் லட்சம் வரைக்கும் டர்ன்ஓவர் பண்ற அளவுக்கு வளர்ந்திருக்கோம்’’ என்று புன்னகைக்கிறார் செளந்தர்யலட்சுமி.


உடைந்த கற்களிலிருந்து ஒரு பிராண்டை உருவாக்கிய திருப்தி அந்தப் புன்னகையில் தெரிகிறது!



 
 
 

Comments


bottom of page