Home Loan Guide: SIP முதலீடு மூலம் வீட்டுக் கடனை அடைப்பது புத்திசாலித்தனமா? ரிஸ்க்கான முடிவா?
- yagasathriya24mana
- 5 days ago
- 3 min read
மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி (SIP)-ல் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வீட்டுக் கடனை மொத்தமாக அடைக்கும் உத்தி தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

வீட்டுக் கடன் வாங்குவது மிக எளிது. ஆனால் அதை நீண்டகாலம் செலுத்துவது என்பது நடுத்தர வர்க்கத்தினரின் மிகப்பெரிய நிதிச் சுமையாகும், பலரும் கடனை விரைவாக அடைக்க, மாதந்தோறும் கிடைக்கும் உபரி பணத்தை முன்கூட்டியே கடன் கணக்கில் செலுத்தி விடுகிறார்கள். ஆனால் அதை மாதந்தோறும் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி (SIP)-ல் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வீட்டுக் கடனை மொத்தமாக அடைக்கும் உத்தி தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இது பார்ப்பதற்கு லாபகரமானதாகத் தோன்றினாலும், இதில் உள்ள சாதக பாதகங்கள் என்ன? இந்த உத்தியைத் தேர்வு செய்வது என்பது லாபகரமானதா? இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம்

எது சாதகம்?
வீட்டுக் கடனை அடைப்பதில் ப்ரீ பேமெண்ட் எனப்படும் முன்கூட்டியே கடனை அடைக்கும் முறையைத்தான், பெரும்பாலான நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். இது வட்டியைப் பெரிய அளவில் மிச்சப்படுத்த உதவும். இது ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பெரிய அளவிலான தொகையை மிச்சப்படுத்தவும் உதவும். விரைவில் கடனை அடைக்கவும் உதவிகரமாக இருக்கும். அப்படி இருக்கையில் அதனுடன் ஒப்பிடும்போது எஸ் ஐ பி மூலம் செலுத்துவது என்பது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும். எது ஸ்மார்ட்டான வழி என்ற கேள்வியும் எழுகிறது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் வெளியான பதிவொன்றில், மாத தவணையை எஸ்.ஐ.பி-ஐ பயன்படுத்தி எப்படித் திட்டமிடலாம் என்பது குறித்துக் கூறப்பட்டிருந்தது.
இந்த உத்தியானது புதிதாக வீட்டுக் கடன் பெறத் திட்டமிடுபவர்களுக்கும் அல்லது ஏற்கனவே கடன் பெற்றுள்ளவர்களுக்கும் நன்றாகப் பொருந்தும். உங்களிடம் ஏற்கனவே கடன் இருந்தால், அதைச் செயல்படுத்த உங்கள் கடனை மறு நிதியுதவி செய்து தவணை காலத்தை நீட்டிக்கலாம். நீங்கள் புதிய வீட்டுக் கடன் பெற விரும்பினால், நீண்ட தவணை காலத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இது உங்கள் வீட்டுக் கடன் மாத தவணையைக் குறைக்க உதவும். இதன் மூலம் மீதமுள்ள சேமிப்பு தொகையை ஒரு மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி-ல் முதலீடு செய்ய முடியும்.
15 ஆண்டு Vs 20 ஆண்டு: கடன்
உதாரணமாக நீங்கள் ஆகஸ்ட் 2005ல் 8.45% வட்டி விகிதத்தில் 15 ஆண்டுகளுக்கு 80 லட்சம் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், உங்கள் இ.எம்.ஐ 78,545 ரூபாயாக இருந்திருக்கும். 15 ஆண்டுக்கால கடன் தவணை காலத்தில், நீங்கள் வட்டியாக மட்டும் சுமார் 61 லட்சத்தைச் செலுத்தியிருப்பீர்கள். இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடன் தவணை காலத்தில், நீங்கள் வட்டியாக மட்டும் சுமார் 61 லட்சத்தைச் செலுத்தியிருப்பீர்கள். இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடனை முடிக்க அசல் மற்றும் வட்டி சேர்த்து மொத்தம் 1 கோடிக்கு ரூபாய்க்கு மேல் செலுத்தியிருப்பீர்கள்.

அதே 80 லட்சம் ரூபாய்க் கடன் தொகையை எடுத்துக் கொண்டு, அதன் தவணை காலத்தில் 20 ஆண்டுகளாக நீட்டிப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்போது உங்கள் மாதத் தவணை 69,173 ரூபாயாக ஆக குறையும். எனினும் கடன் காலத்தில் நீங்கள் சுமார் 25 லட்சம் கூடுதலாக வட்டியாகச் செலுத்த வேண்டியிருக்கும் (மொத்த வட்டி ரூ.86,01,496). ஆனால் இங்கே தான் ஒரு சுவாரஸ்யமான திருப்பம் உள்ளது.
15 ஆண்டு Vs 20 ஆண்டு: எஸ்.ஐ.பி
மேற்கண்ட இரண்டு மாத தவணைகளுக்கான வித்தியாச தொகையை 9,372 ரூபாயாக, நிஃப்டி 50 குறியீட்டைப் பின்பற்றும் ஒரு மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்தால் என்னவாகும். 2005 – 2020 வரையிலான 15 ஆண்டுகள் காலகட்டத்தில், நிஃப்டி 50 TRI குறியீடானது ஆண்டுக்குச் சராசரியாக 10.12% வளர்ச்சி கண்டிருந்தது. இந்த காலகட்டத்தில் மாதம் 9,372 ரூபாயாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தால், அந்த தொகையானது 38,25,361 ரூபாயாக வளர்ந்திருக்கும். அதேசமயம் மீதமுள்ள வீட்டுக் கடன் நிலுவைத் தொகை 33,75,532 ரூபாயாக இருந்திருக்கும். கடனை முழுமையாக அடைத்து விட்டாலும், உங்களிடம் சுமார் 4.5 லட்சம் மிச்சம் ஆகியிருக்கும். இந்த எஸ்.ஐ.பி தொகையை 20 ஆண்டுகளுக்குத் தொடரும்போது 96 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.
இந்த திட்டத்தில் உள்ள முக்கிய ரிஸ்க்குகள்!
சந்தை அபாயம் மற்றும் நிச்சயமற்ற தன்மை; இந்த உத்தியின் மிகப்பெரிய பின்னடைவு என்னவென்றால், உங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை விட உங்கள் எஸ் ஐ பி முதலீட்டின் லாபம் வேகமாக வளர்ச்சியடையவில்லை என்றால் இந்த திட்டம் பலனளிக்காது.
லாபத்திற்கு உத்தரவாதம் இல்லை: பங்குச் சந்தையில் எப்போதும் உறுதியான லாபம் கிடைக்கும் என்று கூற முடியாது. கடந்த காலத்தில் கிடைத்த லாபம் எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
சந்தை மற்றும் வட்டி விகித மோதல்: இந்த திட்டத்தில் சந்தை அபாயமும் உள்ளது. முதலீட்டு லாபமானது கடன் வட்டி விகிதங்களை விட அதிகமாக இருக்காமல் போக வாய்ப்புள்ளது.
வரிச் சலுகைகள் தாக்கம்
வீட்டுக் கடன் மூலம் வரிச் சலுகைகளைப் பெறக் கூடியவர்களுக்கு இந்த உத்தி மேலும் சாதகமாக மாறலாம். ஏனென்றால் அவர்களின் நிகர கடன் செலவு குறைவாக இருக்கும்.
பழைய வரி முறை: பிரிவு 80சி -ன் மூலம் அசல் தொகைக்கும், பிரிவு 24ன் கீழ் வட்டிக்கும் வரி விலக்கு கிடைக்கும். இதை ஒருங்கிணைந்து பெரும்போது செலவும் பெரிய அளவில் குறையும்.
புதிய வரி முறை: புதிய வரி முறையில் உங்கள் வீடு வாடகைக்கு விடப்பட்ட வீடாக இருந்தால், வீட்டுக் கடன் வட்டி செலுத்துதலில் 2 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும்.
தொடர்ச்சியான முதலீட்டின் அவசியம்
தொடர்ச்சியான முதலீடு மிகவும் அவசியம். நீங்கள் சரியான முறையில் முதலீடு செய்யத் தவறினால், உங்களால் எதிர்பார்க்கும் லாபத்தைப் பெற முடியாது. கடனையும் முழுமையாக அடைக்க முடியாது. ஆக சீரான முதலீடும், நேர்த்தியான திட்டமிடலும் மிக அவசியம்.







Comments